கல்வீச்சு, வன்முறை... அசாமிலும் வெடித்த வக்பு சட்டத்திற்கு எதிரான போராட்டம்; போலீசார் தடியடி

மேற்கு வங்காளம், திரிபுராவை தொடர்ந்து அசாமிலும் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது.;

Update:2025-04-13 18:55 IST

கவுகாத்தி,

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு திருத்த சட்டம் தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. எனினும், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இது தொடர்பாக சுதி, ஜாங்கிப்பூர் மற்றும் சாம்சர்கஞ்ச் பகுதிகளில் நேற்று முன்தினம் பெரிய அளவில் வன்முறை வெடித்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட கும்பல் பல்வேறு இடங்களிலும் பொது சொத்துகளை சூறையாடியது. வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில், பலருக்கு காயம் ஏற்பட்டது. இதில், வன்முறை பாதித்த சாம்சர்கஞ்ச் பகுதியில் ஜாப்ராபாத் என்ற இடத்தில் வீட்டில் தந்தை மற்றும் மகன் தாக்கப்பட்டு கிடந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்து விட்டனர்.

இதேபோன்று, சாம்சர்கஞ்ச் பகுதியில் துலியான் என்ற இடத்தில் மற்றொரு நபர், துப்பாக்கி குண்டு காயத்துடன் கிடந்துள்ளார். அவரை அதிகாரிகள் மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். வன்முறைக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். இந்த விவகாரத்தில், 150 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இதேபோன்று, திரிபுராவின் உனகோடி மாவட்டத்தில், வக்பு திருத்த சட்டம் வாபஸ் பெறப்பட வேண்டும் என வலியுறுத்தி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் பத்ருஜ்ஜாமன் தலைமையில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று பேரணியாக சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் திடீரென வன்முறையில் இறங்கினர். அவர்கள் காவலர்கள் மீது கற்களையும், பாட்டில்களையும் தூக்கி வீசினர்.

இதில், குப்ஜார் பகுதியில் நடந்த வன்முறையில் கைலாஷாகர் பகுதிக்கான சப்-டிவிசனல் போலீஸ் அதிகாரி ஒருவர் உள்பட 18 போலீசார் காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து கும்பலை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த சூழலில், அசாமில் கச்சார் மாவட்டத்தில் சில்சார் நகரில் பெரங்கா பகுதியில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி ஒன்று இன்று நடைபெற்றது. இதில், 400 பேர் வரை கலந்து கொண்டு சாலை மறியல், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களில் சிலர் திடீரென கல்வீச்சில் ஈடுபட்டதுடன், வன்முறையிலும் இறங்கினர்.

இதனை தொடர்ந்து அவர்களை கலைந்து போக செய்வதற்காக, போலீசார் லேசான தடியடி நடத்தினர். அவர்களை நோக்கியும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதன்பின்பு அந்த பகுதியில் நிலைமை சரி செய்யப்பட்டது. இதுபற்றி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. ஆனால், ஒருவரும் கைது செய்யப்படவில்லை.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு கொடிகளை காட்டியபடியும் மற்றும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடியும் காணப்பட்டனர். சட்டம் வாபஸ் பெறப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இதுபற்றி அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா கூறும்போது, வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக சிறுபான்மை சமூகத்தினர் நடத்தும் போராட்டத்தின்போது, சில இடையூறுகள் ஏற்படலாம் என அசாம் போலீசார் தரப்பில் இருந்து வலுவான உளவு தகவல் கிடைத்தது என கூறினார். எனினும், எந்த வன்முறையும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், போலீஸ் படை விரிவான முறையில் பணியாற்றி உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்