மூதாட்டியிடம் கோபமாக பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சுரேஷ் கோபி
மத்திய மந்திரி சுரேஷ் கோபி தனது தொகுதியில் மக்களுடன் கலந்துரையாடும் போது மூதாட்டியிடம் கோபமாக பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.;
கேரள மாநிலம் திருச்சூர் மக்களவை தொகுதி எம்.பி. நடிகர் சுரேஷ் கோபி. மாநிலத்தின் பா.ஜனதாவின் ஒரே எம்.பி.யான இவர் தற்போது மத்திய மந்திரியாகவும் உள்ளார். இவர் தனது வீட்டில் வைத்து தொகுதி மக்களின் குறைகளை கேட்டு வருகிறார். நேற்று முன்தினம் தனது தொகுதி மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஆனந்தவல்லி என்ற மூதாட்டி தான் கருவனூர் சேவை கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை திரும்பபெற உதவ முடியுமா? என்று கேட்டார். அதற்கு சுரேஷ் கோபி கோபமாக, உங்கள் எம்.எல்.ஏ., அல்லது மந்திரியிடம் இதை கேளுங்கள். இந்த வங்கியில் மோசடியில் ஈடுபட்ட பலரின் சொத்துகளை பறிமுதல் செய்த அமலாக்கத்துறையிடம் இருந்து பணத்தை பெற முதல்-மந்திரியை அணுக வேண்டும் என கூறினார்.
முதல்-மந்திரியை எப்படி அணுகுவது என்று அந்த பெண் திரும்ப கேட்ட போது, சுரேஷ்கோபி என்னிடமே கேள்வி கேட்கிறீர்கள். என் மீது பழியை போடுகிறீர்கள் என்று கூறினார். அந்த பெண், நீங்கள் தான் எங்கள் மந்திரியும் கூட என்று கூற, அதற்கு சுரேஷ் கோபி நான் மத்திய மந்திரி என்று பதிலளித்தார்.சுரேஷ் கோபியிடம் பேசியது குறித்து ஆனந்தவல்லி செய்தியாளர்களிடம் கூறும்போது, “நடிகராக மாறிய மந்திரியிடம் இருந்து இதுபோன்ற வார்த்தைகளை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. நான் அவரை படங்களில் பார்த்திருக்கிறேன், அவரிடமிருந்து ஒரு அன்பான வார்த்தையை எதிர்பார்த்தேன். எனது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று அவர் சொல்லி இருக்கலாம். வங்கியில் உள்ள அனைத்து வைப்பு தொகையாளர்களுக்கும் தங்கள் பணம் திரும்ப பெறுவார்கள் என தனது தேர்தல் பிரசாரத்தின் போது அவர் உறுதியளித்தார்” என கூறினார்.
கருவனூர் கூட்டுறவு வங்கியில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கடந்த 10 ஆண்டுகளில் வைப்பு தொகையில் ₹100 கோடி அளவுக்கு மோசடி செய்த குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே வீட்டை சீரமைக்க கோரி முதியவர் மனு அளித்த விவகாரம் ஒன்றில் அவரின் கோரிக்கை மனுவை மத்திய மந்திரி சுரேஷ் கோபி நிராகரித்து சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.