பொது இடத்தில் மது அருந்திய இளைஞர்களை கண்டித்த ஆசிரியர் மீது தாக்குதல்
ஆசிரியரை தாக்கிய இளைஞர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.;
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆசிரியர் நிருபம் பால். இவர் நேற்று ஒரு திருமண விழாவிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 8 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 9 இளைஞர்கள் சாலையோரம் நின்று மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட நிருபம் பால், அந்த இளைஞர்களிடம் பொது இடத்தில் மது அருந்துவது தவறு என்று கூறி, அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது இளைஞர்களுக்கும், ஆசிரியர் நிருபம் பாலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், நிருபம் பாலை சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.
இந்த தாக்குதலில் நிருபம் பால் படுகாயமடைந்தார். அவரது மூக்கில் இருந்து இரத்தம் வழியத் தொடங்கியது. தாக்குதலின்போது ஆசிரியருக்கு அந்த இளைஞர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
அங்கிருந்த பொதுமக்கள், இளைஞர்களிடம் இருந்து ஆசிரியர் நிருபம் பாலை மீட்டு, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நிருபம் பாலின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.