இந்தியா, அமெரிக்கா இடையே 8ம் தேதிக்குள் வர்த்தக ஒப்பந்தம்? - வெளியான தகவல்

இந்தியாவும், அமெரிக்காவும் கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.;

Update:2025-06-30 12:59 IST

டெல்லி,

அமெரிக்க ஜனாதிபதிபாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்ற உடன் அவர் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் மீது இறக்குமதி வரியை அதிகரித்தார். அதன்பின்னர், சீனாவுடன் ஏற்பட்ட வர்த்தக மோதலை தொடர்ந்து அந்த வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார். மேலும், சீனாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டார்.

அதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் ஏற்கனவே 10 சதவீத வரி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக 26 சதவீத வரியை டிரம்ப் அறிவித்திருந்தார். அந்த வரியை 90 நாட்கள் நிறுத்தி வைத்துள்ளார். ஆனால், வரும் 9ம் தேதியுடன் வரி விதிப்பை நிறுத்தி வைத்ததற்கான காலக்கெடு நிறைவடைகிறது. மேலும், காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் இல்லை என்று டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதனிடையே, கூடுதல் வரி விதிப்பு தொடர்பாக இந்தியாவும், அமெரிக்காவும் கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்படும் என்றும் டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் வரும் 8ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கூடுதல் வரி விதிப்புக்கான கால அவகாசம் 9ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் அதற்கு முன்பாகவே 8ம் தேதிக்குள் இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் விவசாயம், வாகனங்கள், மருந்து, தொழிற்சாலைகள் சார்ந்த பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டு அந்த துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்