மகா கும்பமேளாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதி கைது

மகா கும்பமேளாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update:2025-03-07 15:48 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தொடங்கிய மகா கும்பமேளா, பிப்ரவரி 26-ந்தேதி நிறைவடைந்தது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் ஒன்று கூடும் இடமாக திகழும் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

இந்த நிலையில், மகா கும்பமேளாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய லஜர் மசி என்ற பயங்கரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர். அமிர்தசரஸ் அடுத்த குர்லியான் கிராமத்தை சேர்ந்த லஜர் மசி, ஜெர்மனியின் பப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் ஸ்வர்ன் சிங் ஜீவன் பாவ்ஜியுடன் இணைந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீதிமன்ற காவலில் இருந்து தப்பிச் சென்ற லஜர் மசியை பஞ்சாப் காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் கவுஷாம்பி மாவட்டத்தில் லஜர் மசி தங்கியிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து பஞ்சாப் காவல்துறையினரும், உத்தர பிரதேச சிறப்புப்படை காவல்துறையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், லஜர் மசி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மகா கும்பமேளாவின்போது தாக்குதலில் ஈடுபட லஜர் மசி சதித்திட்டம் தீட்டியதும், அங்கிருந்த உச்சகட்ட பாதுகாப்பு காரணமாக அவரால் தாக்குதல் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக உத்தர பிரதேச டி.ஜி.பி. பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் கைதான லஜர் மசி, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்