வர்த்தக ஒப்பந்தம் எதிரொலி; லாபத்துடன் தொடங்கிய பங்கு சந்தைகள்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே, தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இன்று இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.;

Update:2025-07-24 10:53 IST

புதுடெல்லி,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 62.59 புள்ளிகள் உயர்ந்து 82,789.23 புள்ளிகளாக காணப்பட்டது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 23.40 புள்ளிகள் உயர்ந்து 25,243.30 புள்ளிகளாக இருந்தது.

பிரதமர் மோடி இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடைய இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையே, தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இன்று இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று, வரி குறைப்புக்கு வழிவகுக்கும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் இடையேயான ஒப்பந்தம் ஆகியவற்றால், இந்திய பங்கு சந்தைகளில் இந்த லாப நோக்கம் காணப்படுகிறது என நிபுணர்கள் தெரிவித்தனர்.

டிரம்ப் அரசு, இந்தியாவுக்கு எதிராக கடும் வரி விதிக்கப்படும் என எச்சரித்த நிலையில், அதுபற்றிய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. ஆகஸ்டு மத்தியில் அமெரிக்க வர்த்தக குழுவினர் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர். எனினும், ஆகஸ்டு 1-ந்தேதியை அமெரிக்கா காலக்கெடுவாக விதித்துள்ளது. அதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இதனால், அடுத்த 7 நாட்களில் இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தகத்தில் வரி விதிப்பது பற்றிய தெளிவான விவரம் நமக்கு கிடைக்க பெறும்.

இதனை இந்திய பங்கு சந்தைகளும் எதிர்நோக்கி காத்திருக்கின்றன என வங்கி மற்றும் சந்தை நிபுணர் அஜய் பாக்கா கூறியுள்ளார். இதுபோன்ற காரணங்களால், இந்தியாவில் பங்கு சந்தைகள் லாப நோக்கத்துடன் தொடங்கியுள்ளன என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்