கொல்கத்தாவில் முப்படை தளபதிகள் மாநாடு; பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
வருகிற 15 முதல் 17-ந்தேதி வரை கொல்கத்தாவில் முப்படை தளபதிகள் மாநாடு நடைபெறுகிறது.;
புதுடெல்லி,
ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையின் மூத்த தளபதிகள் பங்கேற்கும் முப்படை தளபதிகள் மாநாடு மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் வருகிற 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது. 3 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் சீனாவுடனான அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பாதுகாப்பு நிலவரம், காஷ்மீர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு சார்ந்த விவகாரங்கள் குறித்து முப்படைகளின் மூத்த தளபதிகள் ஆலோசனை நடத்துகிறார்கள். முக்கியமாக, பாகிஸ்தானுடன் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடர்பாகவும் விரிவாக ஆய்வு செய்யப்படுகிறது.
‘சீர்திருத்தங்களின் ஆண்டு - எதிர்காலத்துக்கான மாற்றம்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து தளபதிகளுடன் கலந்துரையாடுகிறார். குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் மற்றும் படைகளின் வலிமையை மேலும் அதிகரிப்பது குறித்து அவர் விரிவாக விவாதிப்பார் என ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.