ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத மழை: முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின

காஷ்மீரில் இந்த நூற்றாண்டில் 2-வது அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது;

Update:2025-08-24 19:44 IST

 ஸ்ரீநகர்,

காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்ததால், பல தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஜம்முவில் நேற்று காலை நிலவரப்படி 19 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. ஒரு நூற்றாண்டில் 2-வது அதிகபட்ச மழை இதுவாகும். 1926-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு 23 செ.மீ. ஆகும். இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 11-ந்தேதி 2-வது அதிகபட்ச மழைப்பொழிவு 18.9 செ.மீ ஆகும். ஜம்மு பிராந்தியத்தில், உதம்பூரில் 2-வது அதிகபட்சமாக 14 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. ரியாசி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான அடிப்படை முகாமான கத்ராவில் 11½ செ.மீ. மழை பதிவானது.

கனமழையால் கதுவா மாவட்டத்தில் ஜம்மு- பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு முக்கிய பாலம் லோகேட் மோர் அருகே நடுவில் சேதமடைந்தது. இதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்று பாலம் வழியாக திருப்பி விடப்பட்டது.ஜம்மு நகரில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 12-க்கும் மேற்பட்ட வாகனங்கள் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.முகல் சாலை மற்றும் கிஷ்த்வார் மற்றும் தோடா மாவட்டங்களை தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக்குடன் இணைக்கும் சாலைகளில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் அவைகள் மூடப்பட்டுள்ளன.

வடக்கு காஷ்மீரில் பந்திபோரா-குரேஸ் சாலையில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் விளைவாக சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் சிக்கி தவித்தன. மலையில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்