உ.பி.: 26 லட்சம் அகல் விளக்குகள், 2 கின்னஸ் உலக சாதனை; முதல்-மந்திரி பெருமிதம்
உத்தர பிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் 2 கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ்களையும் பெற்றார்.;
லக்னோ,
நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இதனை முன்னிட்டு, உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் சுற்றுலா துறை, மாநில அரசு மற்றும் அயோத்தி மாவட்ட நிர்வாகம் இணைந்து மகா தீபத்திருவிழாவை இன்று நடத்தியது.
அப்போது வாணவேடிக்கையும் நடத்தப்பட்டது. இதனை பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து, உத்தர பிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கண்டு களித்துள்ளார். இதில், சரயு ஆற்றின் கரையில் 26,17,215 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, திரளான மக்கள் கலந்து கொண்டு மகா ஆரத்தி எடுத்தனர். அப்போது, தீபங்களை ஒன்றாக சுழற்றினர். இதனால், தீபத்திருவிழாவில் ஒரே நேரத்தில் 2 கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, உத்தர பிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் 2 கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ்களையும் பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், உலக அரங்கில் உத்தர பிரதேசத்திற்கான புதுப்பிக்கப்பட்ட அடையாளம் ஒன்றை வடிவமைப்பதில் இந்த திருவிழா ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
கடந்த கால அரசில், அயோத்தியின் ஆன்மீக முக்கியத்துவம் அலட்சியப்படுத்தப்பட்டது என்றும் ராம பக்தர்களின் உணர்வுகள் அவமதிக்கப்பட்டன என்றும் குற்றச்சாட்டாக கூறினார். இந்நிகழ்ச்சியில் சுழற்சி முறையில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.