உ.பி. மகா கும்பமேளா: குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைந்த 50 ஆயிரம் பக்தர்கள் மகிழ்ச்சி

உத்தர பிரதேச மகா கும்பமேளாவில் குடும்பத்தில் இருந்து பிரிந்த 50 ஆயிரம் பக்தர்கள் அரசின் தீவிர முயற்சியால் மீண்டும் குடும்பத்துடன் ஒன்றிணைந்த நிகழ்வு நடந்துள்ளது.;

Update:2025-03-02 19:00 IST

பிரயாக்ராஜ்,

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற கூடிய மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கியது. இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அவர்களின் வருகையை கவனத்தில் கொண்டு, 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்திருந்தது. இதனால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், எந்தவித பெரிய அசம்பாவித சம்பவங்களும் இன்றி 45 நாட்களில், இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. 65 கோடிக்கும் கூடுதலான பக்தர்கள் கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடியுள்ளனர்.

இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் அலை கடலென திரண்டு வந்து புனித நீராடலில் கலந்து கொண்டபோதும், வந்திருந்த பக்தர்களில் பலர் அவர்களுடைய அன்புக்குரியவர்களிடம் இருந்து பிரிந்த சோக நிகழ்வும் ஏற்பட்டது.

எனினும், முதல்-மந்திரி யோகி தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சியால், 54,357 பேர் அவர்களுடைய குடும்பத்துடன் மீண்டும் இணைந்தனர். அவர்களில் பலர் பெண்கள் ஆவர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நேபாளத்தில் இருந்து சென்ற அவர்கள் மீண்டும் குடும்பத்துடன் ஒன்றிணைந்தனர்.

இதில், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நிகழ்ச்சி தடையற்ற முறையில் நடக்க வேண்டும் என்பதற்காக, டிஜிட்டல் கோய பயா கேந்திரா அரசால் அமைக்கப்பட்டது. கும்பமேளா பகுதியில் 10 இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டன. இதன் உதவியால், 35 ஆயிரம் பேர் குடும்பத்துடன் இணைந்தனர்.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முகம் கண்டறியும் சாதனங்கள், பன்மொழி ஆதரவு உள்ளிட்டவற்றின் உதவியுடன் இந்த மையங்கள் செயல்பட்டன. இதேபோன்று என்.ஜி.ஓ. அமைப்பினரும் பாராட்டத்தக்க பணிகளை மேற்கொண்டனர். இதுபோன்ற 50 ஆயிரம் பக்தர்கள் அரசின் தீவிர முயற்சி மற்றும் என்.ஜி.ஓ. அமைப்பினரின் செயல்பாடுகளால் மீண்டும் குடும்பத்துடன் ஒன்றிணைந்த மகிழ்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்