உ.பி.: டிராக்டர்-கன்டெய்னர் லாரி மோதல்; 8 பேர் பலி
போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.;
புலந்த்சாகர்,
உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் நகரில் இருந்து ராஜஸ்தானின் கோகமதி பகுதிக்கு பக்தர்கள் சிலர் சாமி தரிசனம் செய்வதற்காக டிராக்டரில் சென்றுள்ளனர். அவர்கள் ஜஹர்பிர் பகுதிக்கு செல்வதற்காக பயணம் மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் செல்லும் வழியில், புலந்த்சாகர் மாவட்டத்தின் ஆர்னியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட கதல் கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலை 34-ல் திடீரென சரக்குகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி ஒன்று டிராக்டர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் டிராக்டர் தூக்கி வீசப்பட்டு, நொறுங்கியது. டிராக்டரில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், 8 பேர் பலியானார்கள். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. 40 பேர் காயமடைந்தனர். காயமடைந்த பக்தர்கள் சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.