உத்தர பிரதேசம்: ‘வந்தே மாதரம்’ பாட மறுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

ஆசிரியர் ஷம்சுல் ஹாசனை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிகாரி ராகேஷ் குமார் உத்தரவிட்டார்.;

Update:2025-11-13 15:38 IST

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடுவதை கட்டாயமாக்க வேண்டும் என அந்த மாநிலத்தின் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இளம் தலைமுறையினர் மத்தியில் தேசப்பற்று அதிகரிக்கும் என்றும், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பாரத மாதாவை எதிர்ப்பவர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் உத்தர பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அதிகாலை அசெம்ப்ளி கூட்டத்தின்போது ‘வந்தே மாதரம்’ பாடப்படுகிறது. அந்த வகையில் அலிகார் மாவட்டத்தில் உள்ள குதூப் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில், காலை நேரத்தில் நடைபெறும் அசெம்ப்ளி கூட்டத்தின்போது ‘வந்தே மாதரம்’ பாடலை பாட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Advertising
Advertising

இதன்படி அனைவரும் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடிய நிலையில், ஷம்சுல் ஹாசன் என்ற ஆசிரியர் மட்டும் ‘வந்தே மாதரம்’ பாட மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் அவர் முறையிட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சக ஆசிரியர்களுடன் ஷம்சுல் ஹாசன் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி ராகேஷ் குமார் சிங்கிடம் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சுஷ்மா ராணி புகார் அளித்தார். இந்த புகார் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ‘வந்தே மாதரம்’ பாடுவது தங்கள் மத கோட்பாட்டிற்கு எதிராக உள்ளது என்று ஷம்சுல் ஹாசன் கூறியதாக தலைமை ஆசிரியர் சுஷ்மா ராணி தெரிவித்தார்.

இதையடுத்து ஆசிரியர் ஷம்சுல் ஹாசனை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிகாரி ராகேஷ் குமார் உத்தரவிட்டார். அதே சமயம், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஆசிரியர் ஷம்சுல் ஹாசன் மறுத்துள்ளார். ‘வந்தே மாதரம்’ பாட வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு முன்பாக மாணவர்களின் பெற்றோரிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற மட்டுமே கூறியதாகவும், சக ஆசிரியர்களுடன் மோதலில் ஈடுபடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்