துணை ஜனாதிபதி தேர்தல்; பிஜு ஜனதா தளம், பி.ஆர்.எஸ். கட்சிகள் புறக்கணிப்பு

துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது.;

Update:2025-09-08 20:48 IST

புதுடெல்லி,

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து 17-வது துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி வேட்பாளராக களம் இறக்கப்பட்டார்.

தேர்தல் கமிஷன் அறிவிப்பின்படி நாடாளுமன்ற இரு அவைகளின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 788 ஆகும். தற்போது மாநிலங்களவையின் 245 உறுப்பினர் இடங்களில் 5 இடங்கள் காலியாக உள்ளன. மக்களவையின் 543 இடங்களில் ஒரு இடம் காலியாக இருக்கிறது. இதனால் தற்போது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 782 ஆக உள்ளது.

இதில் ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கு மக்களவையில் 240 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 99 உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களுடன் கூட்டணி கட்சி உறுப்பினர்களையும் சேர்த்தால் 450-க்கு மேல் வரும். இதனால் வெற்றி வாய்ப்பு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிரகாசமாக இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

இருப்பினும் எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி, இந்த தேர்தல் "சித்தாந்த போர்" என குறிப்பிட்டு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்தநிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள்தான் இருக்கிறது. விடிந்தால் தேர்தல் என்ற நிலை இருப்பதால் இரு அணியினரும் அதற்கான முன்னேற்பாடு பணிகளில் முழு வீச்சாக உள்ளனர்.

தேர்தலை புறக்கணிக்க போவதாக ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது. இக்கட்சிக்கு மக்களவையில் எம்.பி.க்கள் யாரும் இல்லை, அதே நேரத்தில் மாநிலங்களவையில் 7 எம்.பி.க்கள் உள்ளனர்.

அதே போல், தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதீய ராஷ்ட்ரீய சமிதி(பி.ஆர்.எஸ்.) கட்சியும் துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளது. இக்கட்சிக்கும் மக்களவையில் எம்.பி.க்கள் யாரும் இல்லை, மாநிலங்களவையில் மட்டும் 4 எம்.பி.க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்