வீடியோ காலில் நிர்வாணம்... இளம்பெண்களின் பெயரில் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
வாலிபருக்கு சமூக வலைதளம் மூலம் பல இளம்பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டது.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் சண்டூர் பகுதியை சேர்ந்தவர் சுபம் குமார் மனோஜ் (வயது 25). இவர் டெல்லியில் கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு படித்திருந்தார். அங்கு அவர் சில மாதங்கள் வேலை பார்த்து வந்தார். அப்போது சமூக வலைதளம் மூலம் பல இளம்பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் காதல் பெயரில் இளம்பெண்களை தனது காம வலையில் விழ வைத்துள்ளார். பின்னர் அந்த இளம்பெண்களிடம் வீடியோ அழைப்பில் பேசிய அவர் நிர்வாணமாக வரும்படி வற்புறுத்தி வந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் இளம்பெண்களின் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் தொடங்கி ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அதாவது அந்த பெண்கள் பெயர் மட்டுமின்றி புகைப்படத்தையும் பயன்படுத்தி வந்துள்ளார். சமீபத்தில் இதேபோல மும்பையை சேர்ந்த கல்லூரி மாணவியின் பெயரில் போலி கணக்கு தொடங்கி சில ஆபாச வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
இதுகுறித்து அந்த மாணவி மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுபம் குமாரை தேடி வந்தனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் டெல்லியில் இருந்து அவர் சொந்த ஊரான பல்லாரி மாவட்டம் சண்டூருக்கு வந்து தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.
முன்னதாக போலீசார் கூகுள் நிறுவனம் மூலம் ஆபாச வீடியோ பதிவிட்ட சமூக வலைதளம் குறித்த தகவலை பெற்றனர். அதில் சுபம் குமார் தனது காம வலையில் விழாத இளம்பெண்களின் பெயரில் சமூக வலைதள கணக்குகளை தொடங்கி ஆபாச படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து பல்லாரி வந்த மும்பை போலீசார் சுபம் குமாரை கைது செய்தனர்.
விசாரணையில் சுபம் குமார் 10 போலி சமூக வலைதள கணக்கு தொடங்கி இருப்பது தெரியவந்தது. இதற்காக 90-க்கும் அதிகமான இ-மெயில் கணக்குகளை அவர் தொடங்கி பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரது செல்போனை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அவரது செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
அதாவது 13,500 ஆபாச வீடியோக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சுபம் குமாரை மும்பைக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.