‘உங்களை கட்டிப்பிடிக்க வேண்டும்...’ டெல்லியில் கொரிய பெண்களிடம் முகம்சுளிக்கும் செயலில் ஈடுபட்ட வாலிபர்
வாலிபரின் செயலுக்காக இந்தியர்கள் சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.;
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள ‘இந்தியா கேட்’ பகுதி அருகே கொரிய நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளான 2 பெண்களிடம் வாலிபர் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது போன்ற செயல்களால் சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக பலர் வேதனை தெரிவித்துள்ளனர்.
அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர், கொரிய நாட்டு பெண்களிடம் சென்று முதலில் கைகளை இடித்துக் கொள்ள வேண்டும்(Fist bump) என்று கேட்கிறார். மேலும் ‘எனது கனவு இது’ என்றும் அவர் கூறுகிறார். முதலில் குழப்படைந்த அந்த பெண்கள், அவர் கேட்டபடி Fist bump செய்கின்றனர்.
ஆனால் அதன் பிறகு அந்த நபர் ‘உங்களை கட்டிப்பிடிக்க வேண்டும்’ என்கிறார். இதைக் கேட்டு அந்த பெண்கள் சற்று பின்வாங்குகின்றனர். ஆனால் அந்த வாலிபர் விடாப்பிடியாக அவர்களிடம் கட்டிப்பிடிக்குமாறு கேட்கவே, ஒரு பெண் அவரை கட்டிப்பிடித்துவிட்டு நகர்ந்து செல்கிறார்.
இந்த வீடியோ காட்சிக்கு சமூக வலைதளங்களில் பலர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். அந்த வாலிபரின் முகம்சுளிக்கும் செயலுக்காக இந்தியர்கள் சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர். மேலும் வெளிநாடுகளில் இந்தியர்கள் மீது தவறான அபிப்ராயம் ஏற்படுவதற்கு இது போன்ற சில நபர்களின் செயல்களே காரணமாக அமைவதாக பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.