பீகார் தேர்தலில் வாக்குகளை திருட விடமாட்டோம்: ராகுல் காந்தி
தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை ஒட்டுமொத்த தேசமும் கவனித்துக் கொண்டிருக்கிறது என்று ராகுல் காந்தி கூறினார்.;
பாட்னா,
பீகாரில் வரும் அக்டோபரில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, அங்கு வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்றன. இதன்படி, 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்து வாக்குத் திருட்டு நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.இந்நிலையில், பீகாரில் வாக்காளர்களின் வாக்குரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று யாத்திரையைத் தொடங்கினார்.
இதில் பீகார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராகுல் காந்தி இந்த யாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் பேசியதாவது:"உண்மையான சாதிவாரிக் கணக்கெடுப்பைப் பிரதமர் மோடி நடத்தப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். நாட்டில் உண்மையான சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதை இந்தியா கூட்டணி உறுதி செய்யும். வாக்குத் திருட்டுப் பிரச்சினைக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம். சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தப் பணியில் உண்மையை வெளிக்கொண்டு வருவோம்.தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை ஒட்டுமொத்த தேசமும் கவனித்துக் கொண்டிருக்கிறது.
இதற்கு முன்பு வாக்குகள் திருடப்பட்டதை நாடு அறிந்திருக்கவில்லை. ஆனால், வாக்குகள் எவ்வாறு திருடப்படுகின்றன என்பதை நாங்கள் செய்தியாளர் சந்திப்பில் தெளிவாகக் காட்டிவிட்டோம். மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. பீகார் தேர்தலிலும் வாக்குகளைத் திருடும் சதியாக வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணி நடைபெறுகிறது. பீகார் தேர்தலில் வாக்குகளைத் திருட விடமாட்டோம்."இவ்வாறு அவர் கூறினார்.