கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டம் போட்டு கணவரை கொன்ற மனைவி

கணவர் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்துவிட்டார் என உறவினர்களிடம் சுஷ்மிதா பதற்றத்துடன் கூறியுள்ளார்.;

Update:2025-07-19 21:56 IST

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள துவாரகா பகுதியை சேர்ந்தவர் கரண் தேவ்(வயது 35). இவரது மனைவி சுஷ்மிதா, கடந்த 13-ந்தேதி கரண் தேவின் பெற்றோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தனது கணவர் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்துவிட்டார் என பதற்றத்துடன் கூறியுள்ளார்.

இதையடுத்து உடனடியாக அவரது உறவினர்கள் விரைந்து வந்து பேச்சு மூச்சின்றி கிடந்த கரண் தேவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டு சுஷ்மிதா கதறி அழத் தொடங்கினார்.

இதனிடையே, உயிரிழந்த கரண் தேவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். ஆனால் அதற்கு சுஷ்மிதா மறுப்பு தெரிவித்தார். சுஷ்மிதாவின் உறவினரான ராகுல் தேவ் என்பவரும் பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது அவர்கள் குடும்பத்தினரிடையே சந்தேகத்தை கிளப்பியது. ராகுல் தேவ் என்பவர் சுஷ்மிதாவிற்கு மைத்துனர் முறை கொண்டவர் ஆவார்.

இந்த சூழலில் கரண் தேவின் தம்பி குணால், சுஷ்மிதாவின் செல்போனை சோதித்து பார்த்துள்ளார். அப்போது ராகுல் தேவுடன் சுஷ்மிதா அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்தது. பின்னர் சுஷ்மிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்து பார்த்தபோது குணால் அதிர்ந்து போயிருக்கிறார். தனது கணவர் கரண் தேவை எவ்வாறு கொலை செய்வது என்பது குறித்து ராகுலுடன் சேர்ந்து சுஷ்மிதா தெளிவாக திட்டம் தீட்டியிருக்கிறார். இது குறித்து இன்ஸ்டாகிராம் மூலமாக இருவரும் பேசியிருக்கின்றனர்.

இது குறித்து உடனடியாக கரணின் குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சுஷ்மிதா மற்றும் ராகுல் தேவை கைது செய்தனர். மேலும் அவர்கள் இன்ஸ்டாகிராமில் அனுப்பிய குறுஞ்செய்திகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் மூலம் கரண் தேவுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து அவரை சுஷ்மிதா கொலை செய்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

விஷம் கொடுத்து 3 மணி நேரமாகியும் கரண் தேவின் உயிர் பிரியாமல் இருந்துள்ளது. இதனால் அடுத்து என்ன செய்ய வேண்டும்? என ராகுலிடம் சுஷ்மிதா கேட்டுள்ளார். அதற்கு ராகுல், "அவனை கட்டி வைத்து உடலில் மின்சாரத்தை பாய்ச்சி விடு" என்று கூறியுள்ளார். பின்னர் சுஷ்மிதா, "அவனது வாயை திறந்து விஷத்தை மொத்தமாக ஊற்றி விடலாம். என்னால் அவன் வாயை திறக்க முடியவில்லை. நீயும் வந்தால் இருவரும் சேர்ந்து விஷத்தை கொடுக்கலாம்" என்று கூறியுள்ளார்.

இந்த குறுஞ்செய்திகள் அனைத்தையும் போலீசார் ஆதாரமாக சேகரித்து கோர்ட்டில் சமர்ப்பிக்க உள்ளனர். கரணை கொலை செய்துவிட்டு, அவரது சொத்துகளை அபகரித்து விடலாம் என்ற நோக்கில் ராகுல் மற்றும் சுஷ்மிதா இணைந்து இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக கரணின் குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்