பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்று மத்திய மந்திரி அமித்ஷா பதவி விலகுவாரா? பிரியங்கா காந்தி கேள்வி
பஹல்காம் தாக்குதல் உளவு துறையின் தோல்வியையே காட்டுகிறது என எம்.பி. பிரியங்கா காந்தி, மக்களவையில் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு பதிலடியாக, இந்தியா தரப்பில் இருந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விரிவாக விவாதம் நடத்தப்படும் என எதிர்க்கட்சிகளிடம் தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த விவகாரம் தொடர்பாகவும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகவும் கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை நடவடிக்கைகள் முடங்கின.
இந்நிலையில், மக்களவையில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி நேற்று விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் பற்றி கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியினர், சரியான கேள்விகளை கேட்கவில்லை என குற்றச்சாட்டாக கூறினார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நம்முடைய விமானங்களில் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டன? என கேட்கின்றனர். ஆனால், நம்முடைய படையினர் பாகிஸ்தானின் எத்தனை விமானங்களை சுட்டு வீழ்த்தினர் என ஒருபோதும் கேட்கவேயில்லை என கூறினார்.
இந்திய மகளிரின் சிந்தூர் அழிக்கப்பட்டதற்கு பதிலடியாகவே தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் தீவிரவாத இடங்களை மட்டுமே நாங்கள் இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தினோம். பாகிஸ்தான் தாக்குதலால் இந்தியாவுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.
அப்போது, இந்திய படைகளுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டது. பயங்கரவாத செயல்களை இந்தியா பொறுத்து கொள்ளாது என ஆபரேசன் சிந்தூர் வாயிலாக உலக நாடுகளுக்கு தெளிவுப்படுத்தப்பட்டது. ஆனால், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு மரியாதை செலுத்தியது.
நமது இலக்கு 100 சதவீதம் எட்டப்பட்டு விட்டது. ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது, எந்த அழுத்தத்திற்கும் நாம் அடிபணியவில்லை. அது ஒரு தற்காப்பு நடவடிக்கை என்று கூறினார். முப்படைகளின் அசாத்திய ஒருங்கிணைப்புக்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்றும் அவர் பேசினார்.
இதேபோன்று, போரை நிறுத்த முதலில் பாகிஸ்தான் நாடே கோரிக்கை விடுத்தது. பாகிஸ்தான் விமான தளங்கள் தாக்கப்பட்டதும், தாக்குதலை நிறுத்த அந்நாட்டு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர் என்றும் பேசினார்.
இந்நிலையில், மக்களவையில் பஹல்காம் தாக்குதல் விவகாரம் பற்றி பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது என மத்திய அரசு கூறியது. இதனை நம்பி சுற்றுலா சென்றவர்கள் உயிரிழந்து உள்ளனர். பாதுகாப்பு குறைபாடே இதற்கு காரணம். பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது ஒரு வீரர் கூட இல்லாதது ஏன்? இதனை தடுக்க தவறியது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
உளவு துறையின் தோல்வியையே இது காட்டுகிறது. பஹல்காமில் ஒரு மணிநேரம் தாக்குதல் நடந்தது. அப்போது ஒரு வீரர் கூட இல்லை. அது ஏன்? 2020-க்கு பின்னர் 25 தாக்குதல்கள் நடந்துள்ளன. பொதுமக்கள் மட்டுமின்றி வீரர்களும் உயிரிழந்து உள்ளனர். இதற்கு யார் பொறுப்பு?
காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தபோது, அப்போது உள்துறை மந்திரியாக இருந்தவர் பதவி விலகினார். இதற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலகுவாரா?
காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் உடனே கொல்லப்பட்டனர் என பேசியுள்ளார். பொதுமக்களை பாதுகாக்க வேண்டியது பிரதமர், பாதுகாப்பு மந்திரியின் பொறுப்புதானே? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த அவையில் அமர்ந்துள்ள பலருக்கு பாதுகாப்பு வளையம் உள்ளது. ஆனால், பஹல்காமில் 26 பேர், அவர்களுடைய குடும்பத்தினரின் முன் கொல்லப்பட்டபோது, அவர்கள் அனைவருக்கும் எந்தவித பாதுகாப்பும் இல்லை.
இந்த அரசு, கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிக்க முயற்சிக்கிறது. நாட்டு மக்களின் மீது அக்கறை கொள்வதில் அவர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை. அவர்களின் மனதில் மக்களுக்கு இடமில்லை என்பதே உண்மை. அவர்களுக்கு எல்லாமே அரசியல், விளம்பரம். அவ்வளவுதான் என்றும் பேசியுள்ளார்.
தொடர்ந்து அவர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே, போர் நிறுத்தம் செயல்பாட்டுக்கு வர யார் காரணம்? என தெளிவுப்படுத்த வேண்டும். வேறொரு நாடு கூறி போரை நிறுத்தியது என்பது இதுவே முதல்முறை. நாட்டுக்கு இது அவமானம் என்று அவர் பேசியுள்ளார்.