தனியார் நிறுவன பெண் ஊழியர் தற்கொலை: மகள் இல்லாமல் தன்னாலும் வாழ முடியாது என தாய் எடுத்த விபரீத முடிவு
படுக்கை அறைக்கு சென்ற தாய், தனது மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே நாககொண்டனஹள்ளியில் வசித்து வந்தவர் ரஜிதா ரெட்டி (வயது 58). இவரது மகள் ஸ்ரீஜா ரெட்டி (24). இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். ரஜிதாவின் கணவர் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார்.
நேற்று காலையில் அவர் வேலைக்கு சென்று விட்டார். தாயும், மகளும் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு ஸ்ரீஜா தற்கொலை செய்துகொண்டார்.
சமையல் செய்துவிட்டு படுக்கை அறைக்கு சென்ற ரஜிதா தனது மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். மேலும் தனது கணவரை தொடர்பு கொண்டு மகள் தற்கொலை செய்து விட்டதாகவும், மகள் இல்லாமல் என்னாலும் வாழ முடியாது என்றும் ரஜிதா கூறியுள்ளார். உடனே அவரது கணவர் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது ரஜிதா தூக்கில் பிணமாக தொங்கினார். தரையில் மகள் ஸ்ரீஜாவின் உடல் இருந்தது. இதை பார்த்து ரஜிதாவின் கணவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். தகவல் அறிந்ததும் ஒயிட்பீல்டு போலீசார் விரைந்து வந்து தாய், மகளின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது மின்விசிறியில் கயிற்றால் ஸ்ரீஜா முதலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால், ரஜிதா மனம் உடைந்து போனதுடன், கணவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் மகளின் உடலை மின்விசிறியில் இருந்து ரஜிதா கீழே இறக்கியுள்ளார்.
கணவர் வருவதற்குள் ரஜிதாவும் அதே மின்விசிறியில் தொங்கிய கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஸ்ரீஜாவின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது தெரியவில்லை.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.