குடும்பத்தினர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறுத்த மகளை கொன்ற தந்தை
மகளை கொன்ற பின் கெயார் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் கெயார் (வயது 48). இவரது மகள் அஞ்சு (வயது 20). இதனிடையே, அஞ்சுக்கு கெயார் மற்றும் அவரது குடும்ப உறவினர்கள் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். ஆனால், அந்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய அஞ்சு மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கெயார் நேற்று இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மகள் அஞ்சுவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
மகளை கொன்ற பின் கெயார் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். இதனை தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார், வீட்டில் சடலமாக கிடந்த அஞ்சுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக கெயாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் அஞ்சு வேறொரு நபரை காதலித்து வந்ததாகவும், அந்த காதலுக்கு கெயார் மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.