கள்ளக்காதலனுடன் உல்லாசம்... இடையூறாக இருந்த கணவன் - மனைவி செய்த கொடூர செயல்

வேணுவும், கதிரம்மாவும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.;

Update:2025-08-31 13:55 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சீனிவாசப்புரா தாலுகா சுள்கல்லூ வனப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சாலையில் சந்தேகத்துக்கு இடமாக வாகனம் ஒன்று நின்றிருந்தது. இதையடுத்து அருகே சென்று போலீசார் பார்த்தனர். அப்போது முன்பக்க இருக்கையில் யாரும் இல்லை. பின்னர் வாகனத்தின் பின்புறம் போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது கை, கால் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து ரோந்து பணியில் இருந்த போலீசார் ராயல்பாடு சப்-இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார்.

பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால், பிணமாக கிடந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை?. இதுகுறித்து ராயல்பாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், வாகனத்தில் பிணமாக கிடந்த நபர் முல்பாகல் தாலுகா பெட்டிபாரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான வெங்கடரமணா (வயது 40) என்பதும், அவரை அவரது மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததும் தெரியவந்தது.

அதாவது வெங்கடரமணாவுக்கும் எஸ்.கொள்ளப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கதிரம்மா (35) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில், கதிரம்மாவுக்கு அதே கிராமத்தை சேர்ந்த வேணு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதையடுத்து வேணுவும், கதிரம்மாவும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் வெங்கடரமணாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து கள்ளக்காதலை கைவிடும்படி மனைவிடம் வெங்கடரமணா தெரிவித்தார். ஆனால், கதிரம்மா அதனை கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து வேணுவுடன் கள்ளத்தொடர்பில் அவர் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவர் வெங்கடரமணாவை கொலை செய்ய கதிரம்மா முடிவு செய்தார். இதுகுறித்து கள்ளக்காதலன் வேணுவிடம் கூறினார். இதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். இந்தநிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த வெங்கடரமணாவை கதிரம்மா கள்ளக்காதலன் வேணுவுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பின்னர் வெங்கடரமணாவின் உடலை எரிக்க வாகனத்தில் 2 நாட்கள் அவர்கள் சுற்றி உள்ளனர். பின்னர் போலீசில் மாட்டிவிடுவோம் என பயந்து உடலை வாகனத்திலேயே போட்டுவிட்டு கதிரம்மா, வேணு ஆகியோர் தப்பியோடி விட்டனர். சம்பவம் தொடர்பாக கதிரம்மா, அவரது கள்ளக்காதலன் வேணு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்