திடீரென ஏற்பட்ட பிரசவ வலி.. வனப்பகுதியில் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண்
வண்டிப்பெரியாறு வல்லக்கடவு வனப்பகுதிக்கு சென்று ஏலக்காய் பறிக்கும் பணியில் தம்பதி ஈடுபட்டிருந்தனர்.;
கோப்புப்படம்
மூணாறு,
மூணாறு அருகே உள்ள வண்டிப்பெரியாறு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி பிந்து (வயது 25). இவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் 3-வது முறையாக கர்ப்பமான பிந்து, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை கணவன்-மனைவி 2 பேரும், வண்டிப்பெரியாறு வல்லக்கடவு வனப்பகுதிக்கு சென்று ஏலக்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பிந்துவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதை பார்த்த சுரேஷ், தனது மனைவியை ஆசுவாசப்படுத்தினார். மேலும் இதுகுறித்து குமுளி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் வருவதற்கு முன்பு பிந்துவுக்கு குழந்தை பிறந்தது.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் பிந்துவையும், அவரது குழந்தையையும் மீட்டு சிகிச்சைக்காக வண்டிப்பெரியாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தாய்க்கும், குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு 2 பேரும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.