கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களை குறிவைத்து மோசடி; போலி கால் செண்டர் நடத்தி வந்த இளைஞர் கைது

தங்கள் வங்கியில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளதாக ஏற்கனவே 16 பேர் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளனர்;

Update:2025-06-04 19:39 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள சியான் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. புகார் அளித்த நபர், தனக்கு ஒரு புதிய நம்பரில் இருந்து மொபைல் அழைப்பு வந்ததாகவும், மறுமுனையில் பேசிய நபர் தனது கிரெடிட் கார்டு கடன் வரம்பை அதிகரித்து தருவதாக தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை நம்பி, அந்த நபர் அனுப்பிய ஒரு இணையதள லிங்க்கில், புகார்தாரர் தனது வங்கி விவரங்களை பதிவு செய்துள்ளார். அந்த விவரங்களை வைத்து தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.4.54 லட்சம் ரூபாய் திருடப்பட்டு விட்டதாக பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின்போது, ஏற்கனவே சுமார் 16 பேர் இதே மொபைல் எண்ணில் இருந்து தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், தங்கள் வங்கியில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளதாகவும் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட மொபைல் எண் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த எண் டெல்லியில் இருந்து இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லிக்கு விரைந்த மும்பை போலீசார், அங்கு 11 பேரை வைத்துக் கொண்டு போலி கால் செண்டர் நிறுவனத்தை நடத்தி வந்த மன்ஜீத் குமார் மகாவீர் சிங்(29) என்பவரை கைது செய்தனர்.

இந்த போலி கால் செண்டர் மூலம் நாடு முழுவதும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களை குறிவைத்து இது போன்ற மோசடிகளை இவர்கள் அரங்கேற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்