நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு தர்மஅடி

வாலிபருக்கு பொதுமக்கள் சேர்ந்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.;

Update:2025-10-14 00:11 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் மாவட்ட கோர்ட்டு அருகே தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் வித்யாநகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் இரவு பணிமுடிந்து வீட்டிற்கு பஸ்சில் செல்வது வழக்கம். அதன்படி நேற்றுமுன்தினம் காலை தனியார் மருத்துவமனைக்கு நர்சு வேலைக்கு சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வாலிபர் ஒருவர் வந்துள்ளார்.

பின்னர் அவர் மருத்துவமனைக்கு உள்ளே சென்றுவிட்டார். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து சென்றுவிட்டார். மேலும், இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் நர்சு தெரிவித்தார். இதையடுத்து இரவு பணிமுடிந்து நர்சு வீட்டிற்கு செல்ல அருகே உள்ள பஸ் நிறுத்தத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மீண்டும் அந்த வாலிபர் நர்சை பின்தொடர்ந்து வந்துள்ளார்.

இதனால் பதற்றம் அடைந்த நர்சு வேகமாக நடந்து சென்றார். ஆனால், அவரை விடாமல் பின்தொடர்ந்து வந்த வாலிபர் நர்சிடம் ஆபாச வார்த்தைகள் பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நர்சு கத்தி கூச்சலிட்டார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார்.

அவரை பொதுமக்கள் துரத்தி சென்று பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் நர்சிடம் இதுகுறித்து பொதுமக்கள் விசாரித்தனர். அப்போது தான் வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல பஸ் நிறுத்தத்திற்கு வந்தபோது எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என நர்சு தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் வித்யாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நபர் துமகூருவை சேர்ந்த சதீஷ் (வயது 28) என்பதும், உப்பள்ளி டவுனில் தங்கி கூலி வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

 

Tags:    

மேலும் செய்திகள்