அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்: தொண்டர்கள் உற்சாகம்
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.;
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. மேலும், சில கட்சிகள் இணையும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிவருகிறார்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வாங்கும் பணி அதிமுகவில் கடந்த டிசம்பர் 15-ந் தேதி தொடங்கியது. 31-ந் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டதில், மொத்தம் 10 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில், 2187 மனுக்கள் எடப்பாடி பழனிசாமி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கப்பட்டிருந்தது. 7,988 பேர் தாங்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில், அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த நேர்காணலில், சேலம் மாநகர், சேலம் புறநகர், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, கரூர், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு ஆகிய தொகுதிகளுக்கு போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தி வருகிறார்.
இன்று மதியம் நாமக்கல், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, திருப்பூர் புறநகர் மேற்கு, கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, நீலகிரி ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நடக்கிறது. மற்ற கட்சிகளில் வேட்பாளர் நேர்காணல் தொடங்கப்படுவதற்கு முன்பே அதிமுகவில் தொடங்கியுள்ளதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.