காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்கான பணியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: ராமதாஸ்
மத்திய அரசு தமிழக விவசாயிகள் எதிர்காலத்தை எண்ணி, கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான பணிக்கு தடை விதிக்க வேண்டுமென பிரதமரையும் கேட்டுக் கொள்கிறேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;
பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரியில் மேகதாது அணைக் கட்டும் திட்ட அறிக்கைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியால் தமிழக காவிரி நெற்களஞ்சிய விவசாயிகளை எண்ணி உடனடியாக தமிழக அரசு துரிதமான சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு கர்நாடகாவில் அணைக் கட்டுவதற்கான பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும்!
காவிரியின் குறுக்கே 67 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணையை மேகதாதுவில் கட்டுவது தொடர்பாக 14 ஆயிரம் கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, கர்நாடக அரசு 2018-ம் ஆண்டு மத்திய அரசின் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் மற்றும் மத்திய நீர்வளத்துறை ஆகியவற்றுக்கு அனுப்பி வைத்தது. அந்த அனுமதிக்கு ஆட்சேபனை செய்து அப்போதிலிருந்தே தமிழ்நாடு அரசும், தமிழக அரசியல் கட்சிகளும், காவிரி பாசனப் பகுதி விவசாயிகளும் மேகதாது அணைக் கட்டுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்ப மத்திய நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைக் கொண்டு நேற்றைய விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "மத்திய நீர்வள ஆணையம் மேகதாது அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே அனுமதி அளித்துள்ளது என்றும் இதற்கு ஆட்சேபம் தெரிவிப்பதை ஏற்க முடியாது' என்றும் ஏற்கனவே நடுவர் மன்றம், உச்சநீதி மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்புகளுக்கு புறம்பாக கூறி தமிழ்நாடு அரசு அளித்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
திட்ட அறிக்கை தயாரிப்புக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் இதைத் தமிழ்நாடு அரசு ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே கேரங்கி, கேமாவதி, கபினி என மூன்று அணைகளை கர்நாடக அரசு கட்டியுள்ள நிலையில் மேகதாது அணைக் கட்டப்பட்டால் தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீர் கிடைக்காமல் போகலாம். இந்த அணையை கர்நாடகா கட்டுவதன் நோக்கமே தமிழகத்திற்கு நீர் செல்லக்கூடாது என்பதுதான்.
மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி நெற்களஞ்சிய மாவட்டங்களில் நீர் இல்லாமல் லட்சக்கணக்கான ஏக்கர் நன்செய் நிலங்களின் விவசாயம் பாதிக்கப்படும். சுமார் 20 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.
இந்த நிலையில் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு அலட்சியமாக இருந்து விடக் கூடாது. இந்த திட்ட அறிக்கை தயாரிப்பிற்கான அனுமதியையே கர்நாடகா அரசு அணைக் கட்ட கிடைத்த அனுமதிதான் என செய்திகளைப் பரப்பி வருகிறது. இதற்கு மேல் அடுத்த கட்ட பணிகளை கர்நாடக அரசு தொடராத வண்ணம் முழுமையான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இதில் தமிழக அரசு அலட்சியம் காட்ட கூடாது.
முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பான வழக்கொன்றில் ஏற்கனவே உச்சநீதி மன்றம் அளித்த இறுதி தீர்ப்பிற்கு மாறான கருத்தை உச்சநீதி மன்றமே அண்மையில் தெரிவித்த கருத்தை, உடனடியாக தமிழ்நாடு அரசு, குறிப்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பெரும்பகுதி நெல் சாகுபடியையும் பாதித்து, குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மிகுந்த கவனமாகவும், துரிதமாகவும் செயல்பட வேண்டும்.
மத்திய நீர் வள ஆணையம், காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு போன்ற அமைப்புகளிடம் மட்டுமல்லாமல் மத்திய அரசிடமும் முறையிடுவதுடன், தகுந்த ஆதாரங்களுடன் சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு இதனைத் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக முன் வரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய அரசு தமிழக விவசாயிகள் எதிர்காலத்தை எண்ணி கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான பணிக்குத் தடை விதிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.