சென்னை மெட்ரோ ரெயில் நிலைய 'லிப்டில்' பெண் யூடியூபருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில வாலிபர்

சொந்த வேலை காரணமாக பெண் யூடியூபர் சென்னைக்கு வந்தார்.

Update: 2024-05-26 12:18 GMT

சென்னை,

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், 'யூடியூப்பில்' பிரபலமாக உள்ளார். அவர், ஓட்டல், ஜவுளி கடைகளில் உணவு மற்றும் பொருட்கள் குறித்து வீடியோ எடுத்து 'யூடியூப்பில்' பதிவிட்டு வருகிறார். அந்த பெண், தனது சொந்த வேலை காரணமாக சென்னைக்கு வந்தார்.

பின்னர் மெட்ரோ ரெயிலில் மீனம்பாக்கம் விமான நிலையம் செல்வதற்காக சென்னை உயர்நீதிமன்ற மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு சென்றார். பின்னர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள 'லிப்டில்' ஏறினார். அவருடன் வாலிபர் ஒருவரும் உடன் ஏறினார்.

'லிப்ட்' சென்று கொண்டிருக்கும்போதே அந்த வாலிபர், தனியாக நின்ற இளம்பெண்ணிடம் திடீரென பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சலிட்டார். அதற்குள் 'லிப்ட்' நின்றதும், அந்த வாலிபர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி அந்த இளம்பெண், சென்னை உயர்நீதிமன்ற அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து மெட்ரோ நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார். பின்னர் நடத்திய விசாரணையில் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அசோக் குமார் (வயது 20) என்பதும், சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து அசோக்குமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்