தூத்துக்குடியில் தெரு நாய் கடித்து 11 பள்ளி மாணவர்கள் காயம்

தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலையில் உள்ள பள்ளிக்கு வந்த மாணவர்களை அங்கு நின்றிருந்த தெரு நாய் கடிக்கத் தொடங்கியது. இதனால் அவர்கள் சிதறி ஓடினர்.;

Update:2025-10-10 20:24 IST

தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு வந்த மாணவர்களை அங்கு நின்றிருந்த தெரு நாய் கடிக்கத் தொடங்கியது. இதனால் அவர்கள் சிதறி ஓடினர். ஆசிரியர்கள் நாயை விரட்டி மாணவர்களை மீட்டனர்.

இதில் காயமடைந்த சைமன் (வயது 11), பிரவீனாதேவி(12), முத்துமணிஷ்(13), மலர்விழி(13), கனிஷ்கா(16), தேவி உமாமகேஸ்வரி(16), நித்யஸ்ரீ(15) ஆகியோர் சிகிச்சைக்காக கச்சேரி தளவாய்புரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், மாணவி கபிலாதர்ஷினி(14) உள்ளிட்ட 4 பேர் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து ஓட்டப்பிடாரம் வட்டார மருத்துவ அலுவலர் கோகுல் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காளிமுத்து, கச்சேரி தளவாய்புரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மரியவிஜய் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பள்ளியில் முகாமிட்டு, நாய் கடியால் மற்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என ஆய்வு மேற்கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்