தார்ப்பாய் வீடு... யானைகளின் பிளிறல் சத்தம்... பொதிகை மலையில் தனியாக வாழும் 110 வயது மூதாட்டி
பொதிகை மலை உச்சியின் அடிப்பகுதியில் இஞ்சிக்குழி கிராமம் உள்ளது.;
நெல்லை,
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகை மலையின் உச்சியில் பூங்குளம் பகுதியில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகிறது. மலையில் பாய்ந்தோடும் நீரோடைகள் பாபநாசம் காரையாறு அணையை வந்தடைகின்றன. காரையாறு அணை அருகில் அகஸ்தியர் காலனி குடியிருப்பு, சின்ன மைலார், பெரிய மைலார், சேர்வலாறு, இஞ்சிக்குழி உள்ளிட்ட இடங்களில் காணி இன பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.
காரையார் அணைக்கு மேலே சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுக்குள் பொதிகை மலை உச்சியின் அடிப்பகுதியில் இஞ்சிக்குழி கிராமம் உள்ளது. முன்பு இங்கு 40 குடும்பத்தினர் வசித்த நிலையில் தற்போது 3 குடும்பத்தினர் மட்டுமே வசிக்கின்றனர். அதில் குட்டியம்மாள் (வயது 110) என்ற மூதாட்டி மட்டும் தார்ப்பாயாலான வீட்டில் தனியாக வசிக்கிறார். மற்ற குடும்பத்தினர் வேலைக்காக காரையாறு அணை அடிவாரத்துக்கு சென்று விட்டு, அவ்வப்போது இஞ்சிக்குழி வருகின்றனர்.
அடர்ந்த வனப்பகுதியான இங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலை, தொலைத்தொடர்பு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் கிடையாது. இஞ்சிக்குழியில் அடர்ந்த காட்டில் தனியாக வசிக்கும் மூதாட்டி குட்டியம்மாளுக்கு கடந்த 2021-ம் ஆண்டு நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த விஷ்ணு முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார். மேலும் அவரது வீட்டுக்கு சோலார் மின்வசதி அமைத்து கொடுத்தார்.
காரையார் தபால் அலுவலகத்தில் இருந்து தபால் அலுவலர் கிறிஸ்துராஜா மாதந்தோறும் இஞ்சிக்குழிக்கு நடந்து சென்று உதவித்தொகை வழங்கி வருகிறார். தற்போது குட்டியம்மாள் வயது முதிர்வு காரணமாக தளர்ந்து காணப்படுகிறார். சரிவர நடக்க முடியாததால் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினார். மேலும் காரையாறில் உள்ள ரேஷன் கடைக்கும் சென்று உணவுப்பொருட்களை வாங்க முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து மூதாட்டி குட்டியம்மாள் கூறுகையில், ''இஞ்சிக்குழியில் 40 குடும்பத்தினர் வசித்த நிலையில் தற்போது நான் மட்டுமே வசிக்கின்றேன். இங்கு எந்த வசதியும் இல்லாததால் பலரும் மலையடிவாரத்துக்கு சென்று விட்டனர். 2 குடும்பத்தினர் மட்டும் தங்களது குடியிருப்புகளுக்கு அவ்வப்போது வந்து செல்வார்கள்.
யானைகளின் பிளிறல் சத்தத்தைக் கேட்டுதான் காலையில் கண்விழிப்பேன். சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் இயல்பாக சுற்றி திரியும். வயது முதிர்வு காரணமாக காரையாறு ரேஷன் கடைக்கு செல்ல முடியவில்லை. மளிகை பொருட்களையும் வாங்க முடியவில்லை. வனப்பகுதியில் கிடைக்கும் பழங்கள், கிழங்குகளை சாப்பிடுகிறேன். ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்தால் பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.