கொடுங்கையூரில் 20.16 லட்சம் டன் திடக்கழிவுகள் பயோமைனிங் முறையில் அகற்றம் - சென்னை மாநகராட்சி
கொடுங்கையூரில் இதுவரை 20.16 லட்சம் டன் திடக்கழிவுகள் பயோமைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து அகற்றப்பட்டுள்ளன.;
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 6,300 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் 1,000 டன் கட்டடம் மற்றும் கட்டுமானக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.
மண்டலம் 1 முதல் 8 வரையில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகள் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் பல்லாண்டு காலமாக கொட்டப்பட்டு வந்தன. இதன் காரணமாக கொடுங்கையூர் வளாகத்தில் குப்பைகள் அதிகரித்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் நிலை உருவானது . இதனைத் தொடர்ந்து, கொடுங்கையூரிலும் உள்ள திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தின் பரப்பளவு 342.91 ஏக்கர் ஆகும். இதில் 252 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது. முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, ரூ.641 கோடி மதிப்பீட்டில் கொடுங்கையூரில் உள்ள திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் பிரித்தெடுத்து அகற்றும் பணி 6 தொகுப்புகளாக ஒப்பந்தம் வழங்கப்பட்டு, கடந்த 2024-ம் ஆண்டு முதல் குப்பைகள் பயோமைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் அகழ்ந்தெடுக்கப்பட வேண்டிய திடக்கழிவுகள் 66.52 லட்சம் டன் ஆகும். அதில் இதுவரை 20.16 லட்சம் டன் திடக்கழிவுகள் பயோமைனிங் முறையில் அகற்றப்பட்டுள்ளது. தொகுப்பு 1 மற்றும் 2-ன் வாயிலாக சுமார் 3 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மீட்டெடுக்கப்பட்ட இந்த நிலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் வாயிலாக ரூபாய் 57 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுவேலி அமைத்து குழாய் மூலம் நீர்ப்பாசன வசதியுடன் சுமார் 1,500 பசுமை மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது .
மீதமுள்ள குப்பைகளை பயோமைனிங் முறையில் அகற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இப்பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைந்து மக்கள் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.