தூத்துக்குடியில் அரசு பஸ் டிரைவர் வீட்டில் 23 சவரன் நகை கொள்ளை
தூத்துக்குடியில் அரசு பஸ் டிரைவர் வேலைக்கு சென்றுவிட்டு அடுத்த நாள் காலையில் திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.;
தூத்துக்குடி கங்கா பரமேசுவரி காலனி 1-வது தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 57), அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த தம்பதியின் மகள் கோவையில் படித்து வருகிறார். இதனால் ராமகிருஷ்ணன் மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர் வழக்கம்போல் கடந்த 16ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். அடுத்த நாள் அதிகாலையில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமகிருஷ்ணன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 23 சவரன் தங்க நகைகள், ஒரு செல்போன் ஆகியவை திருடுபோயிருந்தது. ராமகிருஷ்ணன் வேலைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீடு புகுந்து நகை, செல்போனை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை கைப்பற்றி அதனடிப்படையில் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரசு பஸ் டிரைவர் வீட்டில் 23 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.