3 மாடி கட்டிடம் ஆட்டோ மீது விழுந்து மூதாட்டி பலி: கட்டிட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

ஆட்டோவில் தனது பேரக்குழந்தைகளுடன் மூதாட்டி மதுரை யாகப்பா நகர் பகுதிக்கு வந்தார்.;

Update:2025-10-05 09:51 IST

மதுரை,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெமிலா (வயது 65). இவர் தனது 2 பேரக்குழந்தைகளுடன் மதுரைக்கு வந்தார். இந்தநிலையில் மதுரையில் உள்ள கண் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்று விட்டு ஊருக்கு செல்ல புறப்பட்டபோது, மதுரை யாகப்பா நகர் பகுதியில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி ஆட்டோவில் தனது பேரக்குழந்தைகளுடன் அங்கு வந்தார்.

பின்னர் சகோதரர்கள் குடும்பத்தினருடன் பேசி விட்டு மீண்டும் ஊருக்கு செல்ல ஆட்டோவில், தனது பேரக்குழந்தைகளுடன் ஏறினார். அப்போது ஜெமிலாவின் சகோதரர் வீட்டின் அருகே இருந்த சுசீந்திரன் என்பவருக்கு சொந்தமான பழமையான 3 மாடி கட்டிடம் திடீரென ஜெமிலா மற்றும் பேரக்குழந்தைகள் அமர்ந்திருந்த ஆட்டோ மீது கண் இமைக்கும் நேரத்தில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஜெமிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இந்தநிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த பேரக் குழந்தைகளான யாஸ்மின்(5) மற்றும் தவ்ஹீத் சுலைமான் (7) ஆகிய இருவரும் ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த தல்லாகுளம் மற்றும் அனுப்பானடி தீயணைப்பு நிலைய தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய ஜெமிலாவின் உடலை மீட்டனர். பின்னர் பொக்லைன் எந்திரங்களை கொண்டு இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடைபெற்றது. இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், 3 மாடி கட்டிடம் ஆட்டோ மீது விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் தொடர்பாக கட்டிட உரிமையாளர் சுசீந்திரன் மீது 3 பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்