கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை - மசோதா நிறைவேற்றம்

வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.;

Update:2025-04-29 15:14 IST

சென்னை,

கடன் பெற்றவர்களிடம் கடனை வலுக்கட்டாயமாக வசூல் செய்வதை தடை செய்வதற்கான சட்ட மசோதாவை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 26-ம் தேதி சட்டசபையில் அறிமுகம் செய்தார். இந்த மசோதா இன்று விவாதத்திற்கு விடப்பட்டது. அதனை தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

* கடனை வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலைசெய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும்.

*வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.

* 20-ம் பிரிவில் கூறப்பட்டுள்ள மிரட்டுதல், பின் தொடருதல் போன்ற குற்றங்களைச் செய்தால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும். வெளி முகமைகளை பயன்படுத்துதல், ஆவணங்களை எடுத்தல் போன்ற குற்றங்களுக்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

*கடன் வாங்கியவர் மற்றும் அவரது குடும்பத்தினரை, அதாவது அவரின் பெற்றோர், கணவர் அல்லது மனைவி, குழந்தைகள் ஆகியோரை கடன் வழங்கிய நிறுவனமோ அல்லது அதன் முகவரோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தக்கூடாது.

* அந்த வகையில், அவர்களுக்கு இடையூறு விளைவித்தல்; வன்முறையை பயன்படுத்துதல்; அவமதித்தல்; மிரட்டுதல்; அவர்கள் போகுமிடங்களில் பின்தொடர்தல்; அவர்களுக்கு சொந்தமான அல்லது பயன்படுத்தும் சொத்துகளில் தலையிடுதல்; அதை பயன்படுத்த முடியாமல் இடையூறு செய்தல்; அந்த சொத்துகளை பறித்துக்கொள்ளுதல்;

*அவரது வீடு, வசிக்குமிடம், வேலை அல்லது தொழில் செய்யும் இடம் ஆகிய இடங்களுக்கு செல்வது; பேச்சுவார்த்தை நடத்த அல்லது கடனை வசூலிக்க, தேவையற்ற செல்வாக்கை பயன்படுத்தி வலுக்கட்டாயப்படுத்த, தனியார் அல்லது வெளித்தரப்பு முகமைகளின் சேவைகளை பயன்படுத்துதல்; அரசு திட்டத்தின் கீழ் உரிமை அளிக்கும் ஆவணங்கள், பிற முக்கிய ஆவணங்கள், பொருட்கள், வீட்டு உடைமைகளை வலுக்கட்டாயமாக எடுக்க கோருதல் போன்றவை வலுக்கட்டாய நடவடிக்கைகளாக (20-ம் பிரிவுன்படி) கருதப்படும்.

* ஏற்கெனவே நிதி சுமையில் இருக்கும் கடனாளிகளிடம் இருந்து கடன்களை வசூலிக்க சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை விதிக்க இம்மசோதா வகைசெய்யும்.

Tags:    

மேலும் செய்திகள்