தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பைக்கில் பட்டாசு வெடித்தபடி ‘வீலிங்’ செய்த 4 பேர் கைது

தாங்கள் எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்;

Update:2025-10-31 02:57 IST

பெருந்துறை,

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள பவானி ரோட்டில் ஆசிரியர் குடியிருப்பு பகுதி அருகே உள்ள கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்துக்கு சம்பவத்தன்று 4 வாலிபர்கள் தங்களுடைய மோட்டார்சைக்கிளில் வந்தனர். பின்னர் அவர்கள் மோட்டார்சைக்கிள் முகப்பு விளக்கின் மேல் புறத்தில் சரவெடி பட்டாசுகளை வெடித்தபடி ‘வீலிங்’ செய்தனர். இந்த காட்சிகளை மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் தங்களுடைய செல்போனில் வீடியோ எடுத்தனர். மேலும் தாங்கள் எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இதனால் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர்கள் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த ரமேஷ் மகன் சஞ்சய் ஆகாஷ் (வயது 20), ஈரோடு பெரிய சடையம்பாளையத்தைச் சேர்ந்த முருகன் மகன் சஞ்சய் (20), காசிபாளையத்தை சேர்ந்த ராஜா மகன் பிரவின் (22,), வீரப்பம்பாளையத்தைச் சேர்ந்த கவின் (22)’ ஆகியோர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்