சேலத்தில் 56 அடி உயர ராஜ முருகன் சிலை பிரதிஷ்டை
சிலை பிரதிஷ்டை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்து வழிபட்டனர்.;
சேலம்,
சேலம் தாரமங்கலம் அருகே உள்ள அணைமேடு பகுதியில் அமைந்திருக்கும் திருக்கோவிலில் 56 அடி உயர பிரம்மாண்ட ராஜ முருகன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டன. அதன்படி சிலை அமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், சிலையின் வடிவமைப்பு குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து கோவில் நிர்வாகத்தினர் சிலையை மாற்றியமைக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஓராண்டுக்கு முன்பு சிலை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது 56 அடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்துடன் ராஜ முருகன் சிலை நிறுவப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிலை பிரதிஷ்டை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்து வழிபட்டனர்.