6 அடி நீளத்தில் முருங்கைக்காய்.. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்

முருங்கைக்காய்கள் ஒவ்வொன்றும் சுமார் 5 முதல் 6 அடிக்கு நீளத்திற்கு நீட்டமாக காய்த்து தொங்கின.;

Update:2025-09-13 02:13 IST

தேனி,

தேனி மாவட்டம் கம்பத்தில், சுருளிப்பட்டி சாலை பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன். ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். விவசாயத்தில் ஆர்வம் மிக்கவரான இவர், போலீஸ் துறையில் ஓய்வுபெற்ற பிறகு வீட்டை சுற்றியுள்ள தோட்டத்தில் காய்கறி சாகுபடி செய்து வருகிறார். குறிப்பாக ரசாயன மருந்து தெளிக்காமல் இயற்கை முறையில் கத்திரிக்காய், பூசணிக்காய் உள்ளிட்ட காய்கறி செடிகள், அத்தி, முருங்கை உள்ளிட்ட மரங்களை வளர்த்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்ணதாசனுக்கு, சுருளிப்பட்டியை சேர்ந்த அவரது நண்பர் ஒருவர் புட்டு முருங்கையின் 4 குச்சிகளை கொடுத்தார். அவற்றை கண்ணதாசன் தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். அதில், ஒரு குச்சி மட்டுமே மரமாக முளைத்து வளர்ந்தது.

6 அடி நீள முருங்கைக்காய்

இந்தநிலையில் அந்த மரத்தில் முருங்கைக்காய் காய்க்க தொடங்கியது. தொடக்கத்தில் சாதாரண மரத்தில் இருப்பது போன்று இந்த மரத்தில் காய்கள் காய்த்தது. நாளடைவில் நீளமாக காய்கள் வளர தொடங்கின. இதனை பார்த்த கண்ணதாசன் காய்களை பறிக்காமல் விட்டார். மேலும் சில நாட்களில் முருங்கைக்காய்கள் ஒவ்வொன்றும் சுமார் 5 முதல் 6 அடிக்கு நீளத்திற்கு நீட்டமாக காய்த்து தொங்கின.

இதில், சில காய்கள் மரத்திலிருந்து சாட்டை போல் தொங்கி, தரையில் முட்டி மீண்டும் மேல்நோக்கி சுருண்டு வளர்ந்து வருகின்றன. இந்த முருங்கைக்காய்களை கண்ணதாசன் தினமும் பறித்து, தனது டீக்கடையில் காட்சிப்பொருளாக தொங்கவிட்டுள்ளார். கம்பம்-சுருளிப்பட்டி சாலையில் செல்லும் பொதுமக்கள் இந்த நீளமான முருங்கைக்காய்களை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். சிலர் அவற்றை விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

ஒட்டு ரகம்?

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இந்தியாவின் தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் முருங்கை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் யாழ்ப்பாண முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கை உள்ளிட்ட பலவகை முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாக ரகத்திற்கு தகுந்தாற்போல் முருங்கை மரத்தில் 50 செ.மீ. முதல் 126 செ.மீ. நீளத்துக்கு முருங்கைக்காய்கள் வளரும். நாட்டு முருங்கைக்காய் இந்த அளவு நீளத்துக்கு வராது. ஆனால் கண்ணதாசனின் தோட்டத்தில் முருங்கை மரம், ஒட்டுவகையை சேர்ந்ததாக இருக்க வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் விவசாயி ஒருவர், யாழ்பாண முருங்கை என்று ஒட்டு முருங்கையை சாகுபடி செய்தார். அந்த மரங்களில் சுமார் 5 அடி நீள முருங்கைக்காய்கள் காய்த்தன. எனவே கண்ணதாசன் தோட்டத்தில் வளர்ந்த முருங்கை மரத்தை பார்வையிட்டு, அதன் ரகம் குறித்து ஆய்வு செய்யப்படும்” என்றார்.  

Tags:    

மேலும் செய்திகள்