ஆம்னி பஸ்சில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - டிரைவர் போக்சோவில் கைது

சிறுமியின் உடையை விலக்கி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.;

Update:2025-08-03 02:34 IST


கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் கேரளாவை சேர்ந்த தம்பதியினர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருவதற்காக தங்கள் 9 வயது மகளுடன் பயணம் செய்தனர்.

இந்த பஸ், நள்ளிரவு சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை கடந்து வந்துகொண்டிருந்தது. அப்போது பஸ்சின் மாற்று டிரைவரான விருதுநகர் மாவட்டம் பாளையம்பட்டி கிராமத்தை சேர்ந்த முனியாண்டி மகன் ஞானவேல் (வயது40) என்பவர், டிரைவர் இருக்கையின் பின் பகுதியில் படுத்துக்கொண்டு செல்லும்படியான இருக்கையில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியின் உடையை விலக்கி தன்னுடைய செல்போனால் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

இதை அருகில் இருந்த பயணிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள், சிறுமியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்ததுடன் டிரைவர் ஞானவேலிடம் செல்போனை தரும்படி கேட்டனர். அதற்கு அவர், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியவாறு செல்போனை கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் அவரிடம் கடும் வாக்குவாதம் செய்த சிறுமியின் பெற்றோர், ஞானவேலிடம் இருந்த செல்போனை பிடுங்கிப்பார்த்தனர். அப்போது அவர், சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கும் வகையில் அவளது உடையை விலக்கி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனிடையே அந்த பஸ், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் விழுப்புரம் வந்தது. உடனே சிறுமியின் பெற்றோர், சக பயணிகளின் உதவியுடன் அந்த பஸ்சை விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்குள் கொண்டு சென்றனர். பின்னர் சிறுமியின் பெற்றோர், அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் டிரைவர் ஞானவேலை ஒப்படைத்துவிட்டு புகார் செய்தனர்.

அங்கிருந்த போலீசார் கூறிய அறிவுரைப்படி சிறுமியின் பெற்றோர், இச்சம்பவம் குறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் ஞானவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்