மருத்துவமனையில் மதுவிருந்து; தமிழகத்தில் போதைக் கலாசாரம் வேரூன்றியிருக்கிறது - டிடிவி தினகரன்
தமிழகம் போதைப் பொருட்கள் இல்லாத மாநிலம் என மா.சுப்பிரமணியன் பேசி வருவது கேலிக்கூத்தானது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.;
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சிவகங்கை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மதுவிருந்துடன் புத்தாண்டு கொண்டாட்டமா ? - விரிவான விசாரணை நடத்தி காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பிரசவ வார்டில் கடந்த 31 ஆம் தேதி அசைவ உணவுகளுடன் கூடிய மதுவிருந்து கொண்டாட்டம் நடைபெற்றிருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
கல்லல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகளுக்காக 24 மணிநேரமும் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் நடைபெற்றிருக்கும் மதுவிருந்துடன் கூடிய இந்த புத்தாண்டு கொண்டாட்டம் தமிழகத்தில் போதைக் கலாச்சாரம் எந்தளவுக்கு வேரூன்றியிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
கஞ்சா செடிகள் வளரும் மையங்களாகவும், மது அருந்தும் கூடங்களாகவும் அரசு மருத்துவமனைகளே மாறிவரும் நிலையில், தமிழகம் போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக மாறியிருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து பேசி வருவது கேலிக்கூத்தானது.
எனவே, செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்வதோடு, மக்கள் அதிகளவு வந்து செல்லும் மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மருத்துவத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.