திமுக முன்னாள் எம்.பி. எல். கணேசன் காலமானார்
சட்ட மேலவை, சட்டசபை, மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர் என நான்கு வகையான பதவிகளையும் வகித்தவர் எல். கணேசன்.;
சென்னை,
திமுக மூத்த தலைவரும் முன்னாள் எம்.பியுமான எல். கணேசன் காலமானார். அவருக்கு வயது 92.திமுகவின் மிக மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த எல். கணேசன், ‘மொழிப்போர் தளபதி’ என அழைக்கப்பட்டவர். திமுக உயர்நிலைத் திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்த அவர், ஒரத்தநாடு தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2004-ல் திருச்சி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியாக தேர்வானார். மேலும், 1980-ல் மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.வைகோ மதிமுகவை தொடங்கியபோது திமுகவில் இருந்து விலகி மதிமுகவிற்கு சென்ற எல். கணேசன், சில ஆண்டுகளில் மீண்டும் திமுகவிற்கே திரும்பினார்.1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முதன்மையான பங்காற்றியவர். எல்.ஜி. என அரசியல் வட்டாரத்தில் அறியப்பட்ட இவர், மொத்தம் மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார்.
சட்ட மேலவை, சட்டசபை, மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர் என நான்கு வகையான பதவிகளையும் வகித்தவர் எல். கணேசன். மொழிப்போர் தளபதி என அழைக்கப்பட்ட இவர், அவசரநிலை காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த எல். கணேசன், தஞ்சை பாலாஜி நகரில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த நிலையில், இன்று அவர் காலமானார்.