உளுந்தூர்பேட்டையில் நடுரோட்டில் கவிழ்ந்த ஆம்னி பஸ்: ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்

விபத்தில் நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த ஜியாவுதீன் (வயது 25) என்ற இளைஞர் உயிரிழந்தார்;

Update:2026-01-04 09:22 IST

சென்னை,

சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற ஆம்னி பஸ் உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் சிக்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் பாதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சென்டர் மீடியனில் மோதியது. மோதிய வேகத்தில் பஸ் சாலையிலேயே கவிழ்ந்தது.

நள்ளிரவு நேரம் என்பதால், பஸ்சுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் திடுக்கிட்டு எழுந்தனர். படுகாயங்களுடன் பயணிகள் அபயக்குரல் எழுப்பிய நிலையில், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த ஜியாவுதீன் (வயது 25) என்ற இளைஞர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தில் சிக்கிய பேருந்து நடு சாலையில் கிடந்ததால், திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து கிரேன் மூலம் பேருந்து அங்கிருந்து அகற்றப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து நெரிசல் சீரானது.

Tags:    

மேலும் செய்திகள்