முதலிரவில் காதலனுடன் ஓடிய புதுப்பெண்.. அறிவுரைகூறி மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்க வந்தபோது நடந்த களேபரம்

புதுப்பெண்ணுக்கு காதலனின் குடும்பத்தினர் அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைக்க வந்தபோது பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2025-11-16 10:58 IST

ஏர்வாடி,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மூலைக்கரைப்பட்டி ஜெகஜீவன் ராம் தெருவை சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 28). நெல்லையில் ஐ.டி. படித்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணும் காதலித்தனர். ஆனால் காதல் கைகூடாத நிலையில் கடந்த 31-ந் தேதி வேறொரு நபருடன் இளம்பெண்ணுக்கு திருமணம் நடந்தது.

முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில் இளம்பெண் திடீரென பாபுராஜை தொடர்புகொண்டு தன்னை அழைத்துசெல்லுமாறு கூறியுள்ளார். இதன்பேரில் பாபுராஜ் தனது அண்ணன் அரவிந்த்ராஜ் (30) என்பவரிடம் எதுவும் கூறாமல், அவரை காரில் அழைத்துக்கொண்டு களக்காடு மெயின்ரோட்டுக்கு அதிகாலை 2.30 மணிக்கு வந்தார்.

Advertising
Advertising

அங்கு தயாராக நின்ற புதுப்பெண் ஓடிவந்து காரில் ஏறினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அரவிந்த்ராஜ், திருமணமான பெண்ணை அழைத்து செல்வது தவறு என்றார். ஆனால் அவர்கள் இருவரும் ஏற்கவில்லை. அரவிந்த்ராஜை மட்டும் வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு, காதலியுடன் பாபுராஜ் காரில் சென்றுவிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பாபுராஜை செல்போனில் நைசாக பேசி வீட்டுக்கு வரவழைத்தனர். அப்போது திருமணமான பெண்ணை அழைத்து வந்தது தவறு. அவளை பெற்றொரிடம் ஒப்படைக்க வேண்டுமென அறிவுரை கூறினர்.

இதனை இருவரும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து பாபுராஜின் அண்ணன் அரவிந்த்ராஜ், தாயார் சாந்தி, உறவினர் ஆறுமுக பெருமாள், அவரது மனைவி இசைமனோ, சேர்மக்கனி ஆகியோர் இளம்பெண்ணை காரில் அழைத்துக்கொண்டு அவரது பெற்றோர் வீட்டில் ஒப்படைப்பதற்காக சென்றனர்.

இதையறிந்ததும் பெண்ணின் அண்ணன் கதிர்வேல்ராஜா, உறவினர் ராஜா உள்பட 4 பேர் கையில் கம்பு, கற்களுடன் அங்கு வந்து கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். உயிர் பயத்தில் காருக்குள் இருந்த அரவிந்த்ராஜ் உள்பட அனைவரும் கூச்சலிட்டனர். அதற்குள் அக்கம்பக்கத்தினரும் ஓடிவந்தனர். இதுகுறித்து களக்காடு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீசார் காருக்குள் இருந்த 5 பேரையும் மீட்டனர். இதுகுறித்து அரவிந்த்ராஜ் அளித்த புகாரின்பேரில், இளம்பெண்ணின் அண்ணன் கதிர்வேல்ராஜா உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் பாபுராஜின் தந்தை போலீஸ்காரராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்