கோவில் வளாகத்தில் கிடந்த வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு படிவங்கள்... நாமக்கல்லில் பரபரப்பு
வாக்காளர் பட்டியல் படிவங்களை வினியோகம் செய்து அதை பூர்த்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்;
நாமக்கல்,
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நடந்து வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் படிவங்களை வினியோகம் செய்து அதை பூர்த்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஒரு கோவிலில் வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய கணக்கெடுப்பு படிவங்கள் குவிந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்செங்கோட்டு அடுத்த குமாரமங்கலம் நாடார் தெருவில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருச்செங்கோடு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பாகம் எண்-77 பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டிய 300 கணக்கீட்டு படிவங்கள் நேற்று மாலை 5 மணியளவில் கேட்பாரற்று கிடப்பதாக அப்பகுதியில் தகவல் பரவியது.
அந்த படிவங்கள் அருகில் ஒரு பையில் குறிப்பேடு புத்தகமும் இருந்தது. அந்த படிவத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலரான வனிதாவின் பெயர் இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் கண்ணன், 87 கவுண்டம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சுபாதேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
அப்போது, அவர்கள் நடத்திய விசாரணையில், குமாரமங்கலம் அங்கன்வாடி பணியாளரான வாக்குச்சாவடி நிலை அலுவலராக பணிபுரியும் வனிதாவுக்கு கொடுக்கப்பட்ட படிவங்கள் என்பதும், அவர் கோவிலில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய படிவங்களை வைத்துவிட்டு சென்றது ஏன்? என்பது தெரியவில்லை என குழப்பம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் வனிதாவை தொடர்பு கொண்டு கோவிலில் படிவங்கள் கிடந்தது பற்றி தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அவர் உடனடியாக அங்கு விரைந்து வந்தார். அப்போது, அவர் திருச்செங்கோடு உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு அவசரமாக செல்ல வேண்டி இருந்ததால் பாதுகாப்புக்கு ஒரு பெண்ணை வைத்துவிட்டு சென்றதாகவும், யாரோ சிலர் வேண்டும் என்றே பையில் இருந்த படிவங்களை மேஜையின் மீது கொட்டிவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து கோவிலில் வைக்கப்பட்டிருந்த 300 படிவங்களையும் சேகரித்து வனிதா பத்திரமாக எடுத்து சென்றார். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் நடந்து வரும் நிலையில் வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய கணக்கீடு படிவங்கள் கோவிலில் கேட்பாரற்று கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கணக்கீடு படிவங்களை கோவிலில் வைத்துவிட்டு சென்ற விவகாரம் தொடர்பாக மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பேரில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.