சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு; பயணிகள் முன்கூட்டியே வர அறிவுறுத்தல்
வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்கின்றனர்.;
சென்னை,
இந்தியாவின் குடியரசு தின விழா வரும் 26-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு 30-ந்தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் பிரதான நுழைவு வாயில் பகுதியில் நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு படையினர் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்கின்றனர்.
விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதலாக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் விமானங்களில் சரக்கு பார்சல்கள் பலகட்ட தீவிர சோதனைக்குப் பிறகே விமானங்களில் ஏற்ற அனுமதிக்கப்படுகின்றன.
கூடுதல் சோதனைகள் காரணமாக உள்நாட்டு விமானப் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வர வேண்டும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.