தேர்தல் அறிக்கை தயாரிக்க தமிழிசை தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அறிவித்தது பாஜக
பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம் பெற்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.;
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் மக்களின் வாக்குகளை கவர, அரசியல் கட்சிகள் கவர்ச்சிகர வாக்குறுதிகளை அளிப்பது வழக்கம். கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு பேருந்துகளில் இலவச பஸ் பயணம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று திமுக ஆட்சியை பிடிக்கவும் உதவியது.
அதேபோல, ஒவ்வொரு கட்சிகளும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய இருக்கிறோம் என்பதை குறிப்பிட்டு தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையை தயாரிக்க பாஜக இன்று குழு அமைத்துள்ளது. தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் வி.பி துரைசாமி, ராமலிங்கம், கனகசபாபதி, ராம சீனிவாசன், கார்த்தியயினி உள்ளிட்ட 12 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் தமிழகம் முழுக்க பயணம் செய்து பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளை பெற்று தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம் பெற்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.