கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண் கழுத்தை அறுத்து கொன்று புதைப்பு... கணவர், மகன் வெறிச்செயல்
கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் கனகவல்லிடை கொலை செய்ய தவசியப்பன் முடிவு செய்தார்.;
சேலம்,
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அய்யன்நகரை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி ராசாத்தி (வயது 50). இவர் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது தங்கையான சங்ககிரி கஸ்தூரிபட்டியை சேர்ந்த கனகவல்லி (36) கடந்த 13-ந் தேதி அய்யன்நகர் பகுதியில் வசித்து வரும் எனது மகன் மணிகண்டன் (24) வீட்டுக்கு வந்தார். 15-ந் தேதி மாலை அவரை சந்தித்து பேசினேன்.
ஆனால் கடந்த 2 தினங்களாக கனகவல்லியை காணவில்லை. எனவே மாயமான அவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகவல்லியை தேடி வந்தனர். மேலும் அவர் மாயமானது குறித்து சங்ககிரி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இதற்கிடையில் கனகவல்லியின் கணவரான தவசியப்பன் (54), அவரது மகன் கார்த்தி, மணிகண்டன் ஆகியோரிடம் சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, தவசியப்பன் தூண்டுதல்பேரில் அவரது மகன் கார்த்தி, மணிகண்டன் உள்பட 4 பேர் சேர்ந்து கனகவல்லியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தவசியப்பன், கார்த்தி, மணிகண்டன் ஆகியோர் கன்னங்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணையில் வெளியான தகவல் வருமாறு:-
கனகவல்லியின் முதல் கணவர் பழனிசாமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கனவல்லி கணவரை பிரிந்து தவசியப்பனை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்தி என்ற மகனும், சுவேதா என்ற மகளும் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் சங்ககிரியில் உள்ள ஒரு விசைத்தறிகூடத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் கனகவல்லிக்கு பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த அண்ணன், தம்பி உள்பட 3 பேருடன் கள்ளத்தொடர்பு இருந்தது கணவர் தவசியப்பனுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் மனைவியை கண்டித்துள்ளார். தாயின் தவறான செயலால் கார்த்தி கடந்த 3 மாதமாக மணிகண்டன் வீட்டில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இதற்கிடையே கனகவல்லி தனது கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் அவரை கொலை செய்ய தவசியப்பன் முடிவு செய்தார்.
இதையடுத்து அவர் மகன் கார்த்தி மற்றும் மணிகண்டனை சந்தித்து கனகவல்லியை கொலை செய்ய வேண்டும் என்றும், இதற்காக எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் கொடுக்கிறேன் என்றும் கூறினார். அதைதொடர்ந்து தவசியப்பன் உள்பட 3 பேரும் அதே பகுதியை சேர்ந்த விஜயன், சுரேஷ் ஆகியோரை சந்தித்து ரூ.50 ஆயிரம் பேரம் பேசி கனகவல்லியை கொன்று புதைக்க கூறினர். அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
சம்பவத்தன்று இரவு மணிகண்டன் வீட்டில் கனகவல்லி இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கார்த்தி, மணிகண்டன், விஜயன், சுரேஷ் ஆகியோர் கனகவல்லியை அரிவாளால் தலையில் வெட்டியதுடன் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை மணிகண்டன் வீட்டின் பின்புறத்தில் உள்ள விஜயனுக்கு சொந்தமான நிலத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் கனகவல்லியின் உடல் மீது பழைய துணிகளை போட்டு எரித்தனர். உடல் பாதி எரிந்த நிலையில் அதன் மீது மண், கற்களை போட்டு அங்கேயே புதைத்தனர்.
இதையடுத்து இந்த கொலை வழக்கில் தவசியப்பன், கார்த்தி, மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விஜயன், சுரேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும் கனகவல்லியின் உடலை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.