தேர்வு அறைக்கு செல்போனுடன் சென்றதை கண்டித்த ஆசிரியர் - கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு
கோடம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் தேர்வு எழுத முடியாததால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
சென்னை,
சென்னை கோடம்பாக்கம், சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முருகன். இவரது மகன் வாசுதேவன் (வயது 19) தனியார் கல்லூரியில் பி.சி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கல்லூரியில் நடந்த செமஸ்டர் தேர்வு அறைக்கு செல்போன் எடுத்து சென்றதாக தெரிகிறது. இதை சோதனை மூலம் கண்ட பேராசிரியர்கள் வாசுதேவனை கண்டித்து செல்போனை பறித்தனர். மேலும் அவரை தேர்வு எழுத விடாமல் தனி அறையில் போட்டு பூட்டி வைத்த தாகவும் கூறப்படுகிறது
இதனால் வாசுதேவன் மிகுந்த மன வேதனை அடைந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் தனிமையில் இருந்த வாசுதேவன் திடீரென படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சென்ற கோடம்பாக்கம் போலீசார் கல்லூரி மாணவர் வாசுதேவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கே.கே நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வு எழுத முடியாத விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே இன்று காலை கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒன்று திரண்ட வாசுதேவனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாசுதேவன் தற்கொலைக்கு அவரது பேராசிரியர் மற்றும் கல்லூரி நிர்வாகம் தான் காரணம். இதில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வாசுதேவன் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.