சீர்காழியில் கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்பட்ட மருந்து குறித்து ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும் - டிடிவி தினகரன்

அரசு தாய் சேய் நல மையங்களில் வழங்கப்படும் மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்திய பின்பே வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.;

Update:2025-09-19 13:47 IST

கோப்புப்படம் 

சீர்காழி அரசு தாய் சேய் நல மையத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்குச் செலுத்தப்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தி மருந்து குறித்து விரிவான ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் தாய்சேய் நல மையத்தில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண்கள் மற்றும், பிரசவித்த தாய்மார்களுக்குச் செலுத்தப்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தி ஊசியால் அவர்களுக்கு திடீர் காய்ச்சல் மற்றும் உடல் நடுக்கம் ஏற்பட்டிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களின் உடல்நலக்குறைவிற்கு காரணமாகக் கூறப்படும் நோய் எதிர்ப்பு மருந்தை உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்துவதோடு, தமிழகத்தின் மற்ற அரசு மருத்துவமனைகளுக்கும் அம்மருந்து விநியோகிக்கப்பட்டிருந்தால் அவற்றின் பயன்பாடுகளை உடனடியாக நிறுத்தி வைக்கப்படுவதைத் தமிழக சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு உரிய மேல் சிகிச்சை வழங்குவதோடு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு தாய் சேய் நல மையங்களில் அனுமதிக்கப்பட்டிருப்போருக்கு வழங்கப்படும் மருந்துகள் அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்திய பின்பே வழங்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்