மதுரையில் பரபரப்பு.. போலீசார் விரட்டியதில் வாலிபர் உயிரிழப்பு.. அடித்துக்கொன்றதாக உறவினர்கள் போராட்டம்
போலீசார் அவரை அடித்துக்கொன்று கண்மாய் சேற்றில் வீசியதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
மதுரை அண்ணாநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட யாகப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மகன் தினேஷ்குமார் (வயது 31). இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய நண்பர்கள் அஜித்கண்ணா, பிரகாஷ். இவர்கள் 3 பேர் மீதும் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் 3 பேரையும் விசாரணைக்காக அண்ணாநகர் போலீசார் நேற்று காலை அழைத்துச் சென்றனர்.
மதுரை வண்டியூர் அம்மா திடல் அருகே புறக்காவல் நிலையத்தில் வைத்து 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். அங்கிருந்து அண்ணாநகர் போலீஸ் நிலையத்துக்கு 3 பேரையும் அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். போலீஸ் வாகனத்தில் அவர்களை ஏற்றியபோது திடீரென தினேஷ்குமார் மட்டும் தப்பி ஓடியதாகவும், அவரை போலீசார் விரட்டியதாகவும், அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் தண்ணீரில் குதித்த தினேஷ்குமார், சகதியில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
உடனே போலீசார், தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் சென்றபோது சேற்றில் சிக்கி தினேஷ்குமார் பிணமாக கிடந்தார்.
இதற்கிடையே தினேஷ்குமார் உயிரிழந்ததை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அண்ணாநகர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். அப்போது, தினேஷ்குமாரை போலீசார் அடித்துக்கொன்று, உடலை கழிவுநீர் கால்வாய் சேற்றில் வீசி நாடகமாடுவதாகவும் தெரிவித்தனர். தினேஷ்குமார் மரணத்தில் தொடர்புடைய போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். அங்குள்ள பிரதான சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.