தாய் வீட்டுக்கு சென்று திரும்பி வராததால் ஆத்திரம்.. மனைவியை குத்திக்கொன்ற வாலிபர்

10 நாட்கள் ஆகியும் மனைவி வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது கணம் கடும் ஆத்திரம் அடைந்தார்.;

Update:2025-04-13 03:19 IST

கோப்புப்படம்


புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சொரக்குடி தெற்குபேட்டை சோழியன் திடல் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ராமராஜன் (வயது 30). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (28). ஏற்கனவே திருமணமாகி தனது கணவரை பிரிந்த நிலையில் தனது 3 மாத குழந்தையுடன் இருந்த ஈஸ்வரிக்கு, ராமராஜனுடன் இரண்டாவது திருமணம் நடந்து 10 ஆண்டுகள் ஆகிறது. ராமராஜன் மூலம் ஈஸ்வரிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இவர்கள் இருவரும் தற்போது தங்கள் மகன்கள் பிரேம் (11), கிர்த்தின் (9) ஆகியோருடன் சொரக்குடியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ஈஸ்வரியின் தந்தை இறந்து 30-ம் நாள் துக்க நிகழ்ச்சிக்காக தனது சொந்த ஊரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ஈஸ்வரி சென்றார். தாய் வீட்டிற்கு சென்று 10 நாட்கள் ஆகியும் மனைவி வீட்டிற்கு திரும்பி வராததால் ராமராஜன் கடும் ஆத்திரம் அடைந்தார். இதனால் மனைவியை அழைத்துவர அவர் வாழ்மங்கலத்திற்கு சென்றார்.

அப்போது அங்கு கணவன்-மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராமராஜன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி ஈஸ்வரியை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த ஈஸ்வரி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமராஜனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்