நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்கப்படாத விவகாரம்: அரசு மருத்துவமனை மேற்பார்வையாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

தந்தையை மகன் கைத்தாங்கலாக இழுத்துச் செல்லும் வீடியோ வைரலாக பரவியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.;

Update:2025-09-10 13:14 IST


கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சராசரியாக 9 ஆயிரம் பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் ஏழைகள் நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தாலும் பரிசோதனை, ஸ்கேன், ரத்தப் பரிசோதனை என பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்ல நேரிடுகிறது. நடக்க முடியாதவர்களுக்கு சர்க்கரை நாற்காலி கிடைப்பது இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 84 வயது முதியவருக்கு உரிய நேரத்தில் சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட நோயாளியின் மகன் காளிதாஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், எனது தந்தைக்கு 80 வயதுக்கு மேல் ஆகிறது. சர்க்கரை நோயால் கால் எடுக்க வேண்டிய நிலையில் உள்ளார். தந்தையை மல்டி ஸ்பெஷாலிட்டி கட்டிடத்திற்கு பரிசோதனைக்கு அழைத்து வந்தபோது வீல் சேர் இல்லாமல் அலைக்கழிக்கப்பட்டோம். 2 மணி நேரம் காத்து இருந்தும் யாரும் வரவில்லை. மேலும் ரூ.100 கொடுத்தால் தருகிறேன் என ஒரு ஊழியர் கூறினார் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், பணத்தை கொடுப்பதாக கூறிய பிறகு ஏற்கனவே காத்திருப்பில் உள்ளவர்களை முடித்துவிட்டு வருகிறேன். அதுவரை காத்திருங்கள் என்று கூறினார். வெறுப்பான அவர் சிகிச்சையே வேண்டாம் என திரும்பி சென்று விட்டதாக அதில் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி கூறும்போது, ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக யாரும் இதுவரை புகார் கூறவில்லை புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுப்போம் என்றும் லஞ்சம் கேட்பதை ஏற்க முடியாது என்றும் கூறி உள்ளார். இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய முதல்வர் கீதாஞ்சலி, மேற்பார்வையாளர்களான எஸ்தர்ராணி, மணிவாசகம் ஆகியோரை 5 நாட்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

சக்கர நாற்காலி வழங்காததால் தந்தையை மகன் கைத்தாங்கலாக இழுத்துச் செல்லும் வீடியோ வைரலாக பரவியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்